Publisher's Synopsis
"காட்டு மிருகங்களுக்குக் குகையும் புதரும் உண்டு, தங்கியிருக்க; நாட்டைக் காக்கும் போர் வீரர்களாகிய உங்களுக்கு உறைவிடம் உண்டா?"
இல்லையே!!
"மாற்றான் வருகிறான் தாயகத்தைத் தாக்க, உங்கள் இல்லத்தைக் காக்கக் கிளம்புங்கள் என்று தளபதிகள் முழக்கமிடுகிறார்கள், உங்களைப் போர்க்கோலம் கொள்ளச் செய்கிறார்கள்! உங்களுக்கு எங்கே இல்லம் இருக்கிறது? எந்த இல்லத்தைக் காப்பாற்ற நீங்கள் போரிடவேண்டும்? இல்லம் இருக்கிறதா உங்களுக்கு?"
இல்லை! இல்லை!
"இரத்தம் கொட்டுகிறீர்கள் நாட்டுக்காக. உயிரையும் தருகிறீர்கள், தாயகத்தைக் காப்பாற்ற. தாயகம் உங்களுக்குத் தருவது என்ன?"
தெரியவில்லையே!!
"தெரியவில்லையா! காற்றும் ஒளியும் கிடைக்கிறது! இருக்க இடம் தரவில்லை தாயகம்! உழுது பயிரிட வயல் இல்லை. ஒண்டக் குடிசை இல்லை."
ஆமாம்! ஒண்டக் குடிசையும்தான் இல்லை.
வீர இளைஞன், விழியிலே கனிவுடன் காட்சிதரும் இலட்சியவாதி, பெருந்திரளான மக்களைப் பார்த்துக் கேட்கிறான். அவனுடைய கேள்விகள் அந்த மக்கள் மனத்திலே தூங்கிக் கொண்டிருக்கும் எண்ணங்களைத் தட்டி எழுப்புகின்றன.
இதே கேள்விகள், அவர்கள் மனத்திலே ஆயிரம் முறை எழும்பின - அடங்கின! மாளிகைகளைக் காணும் போதெல்லாம் இந்தக் கேள்விகள், மனத்தைக் குடைந்தன! பசும் வயல்களிலே முற்றிக் கிடக்கும் கதிர்களை அறுவடை செய்தபோதும், பழமுதிர் சோலைகளிலே பாடுபட்டபோதும், பாதை ஓரத்தில் நின்று பட்டுடைக்காரருக்கு மரியாதை செய்தபோதும், அவர்கள் மனத்திலே இந்தக் கேள்விகள் எழுந்தன!