Publisher's Synopsis
இருபது ஆண்டுகள் இரத்தம் பொங்கிற்று - காலடிப் பட்ட இடமெல்லாம்! களம் பலப்பல! கடுவேகமாகப் போரிட்ட வண்ணம், நாடு பல வென்றான்; நானிலம் நடுங்கிடப் போரிட்டான். எங்கும் இரத்தவெள்ளம்; பிணமலை; எலும்புக் குவியல்!! போர்! போர்! போர்! என்று முழக்கம் எழுப்பியபடி, இருபது ஆண்டுகள், எங்கும் எவரும் இவன் நடாத்தும் செயல்கள் பற்றியே பேசித் தீரவேண்டிய நிலைமை ஏற்படுத்திவிட்டான்; இரத்தம் பொங்கிற்று - மலை முகடுகளில், பெரு நகரங்களில், சாலைகளில், சோலைகளில், கடலோரங்களில்.
கிளம்பிவிட்டது இவன் நடாத்திச் செல்லும் பெரும் படை என்று செய்தி வெளிவந்தவுடன், அரண்மனைகளிலே அச்சம்! மாளிகைகளிலே மருட்சி! இல்லங்களிலே திகைப்பு ஏற்பட்டு
விடும்.
எப்பக்கம் பார்த்துப் பாய்ந்திடுமோ, எவர்மீது தாக்குதல் நடத்திடுமோ, என்ன நிபந்தனை விதித்திடுமோ என்ற ஏக்கம் குடிகொண்ட நிலையில், பேரரசர்கள் பீதி கொள்வர்.
'நேற்றுதானே கிளம்பிற்று! இதற்குள்ளாகவா, காடு மலை கடந்து, ஆறுகளைத் தாண்டி, அழகு நகர் மீது தாக்குதலை நடத்துகிறது அந்தப் படை' என்று வியந்து கேட்பர் - அவ்வளவு வேகமாக, எத்தகைய இடுக்கண்களையும் கண்டு கலங்காமல், எதர்ப்புகளை முறியடித்தபடி, அவனுடைய படைகள் பாய்ந்திடும்.
பெருங்காற்றைத் தடுத்து நிறுத்திவிடத் தருக்களால் முடிவதுண்டோ - வேரறுந்தன்றோ பெரு மரங்கள் சாய்கின்றன, பெருங்காற்றின் முன்பு!
இப்படையும் அதுபோன்றே, எதிர்ப்புகளை முறித்துக் கீழே சாய்த்துவிட்டு, இடியோசை போன்ற வெற்றி முழக்கமிட்டபடி, முன்னேறும் வேகவேகமாக, குறித்த இடம் நோக்கி, விட்ட கணைபோலதாக்கும் சக்தி மட்டுமல்ல,